சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தேசிய அறிவுசார் சொத்துரிமை விழாவிற்கும், அறிவுசார் சொத்து விழிப்புணர்வு இயக்கத்திற்கும் சிஎஸ்ஐஆர்-கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம், சிஎஸ்ஐஆர் -மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
2023, ஜூலை 19 அன்று சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்ற அறிவுசார் சொத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
சென்னையில் உள்ள இந்தியக் காப்புரிமை அலுவலகத்தின் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணைக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் ஆர்.பானுமதி விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி இயக்குநரும், சிஎம்சியின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான என்.ஆனந்தவல்லி வரவேற்புரையாற்றினார். இளம் மனதுக்குள் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அதிகம் இருப்பதால், அறிவுசார் உரிமைகளைப் பாதுகாப்பதில் இளம் வயதிலேயே அவர்கள் நன்கு அறிந்திருப்பது அவசியம் என்பதே இந்த விழாவிற்குக் கல்லூரி மாணவர்களைப் பார்வையாளர்களாக தேர்வு செய்ததற்கான காரணம் என்று வரவேற்புரையில் இயக்குநர் தெரிவித்தார். சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐயின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சுபேந்து சக்ரபர்த்தி, பார்வையாளர்களுக்குத் தலைமை விருந்தினரை அறிமுகம் செய்தார்.
“அறிவுசார் சொத்துரிமைகள்-இந்தியக் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் அறிவுசார் சொத்துரிமை விழா விரிவுரையாற்றிய . ஆர். பானுமதி, காப்புரிமை, பதிப்புரிமை, வணிகச்சின்னம், வடிவமைப்பு போன்ற பல்வேறு வகையான அறிவுசார் சொத்துக்கள் குறித்தும் இதைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். பிறரைத் தவிர்த்து உண்மையான அறிவின் உரிமையாளரை ஐபிஆர் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் அவர் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியை சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ஆர்.டி.சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். சிஎஸ்ஐஆர்.சிஎல்ஆர்ஐ.யின் மூத்த முதன்மை விஞ்ஞானி தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.