- மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக பங்கேற்க உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்றுள்ள நிலையில், 42 வயதில் ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இம்மாதம் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களில் நடக்க உள்ளது. கடந்த ஐபிஎல் ஏலம் துபாயில் நடத்தப்பட்ட நிலையில், இம்முறை சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவ.22ல் தொடங்கவுள்ளது.
ஆனால் இந்திய நேரப்படி அதிகாலையிலேயே டெஸ்ட் போட்டி தொடங்கி மதியத்திற்குள் நிறைவடையும். இதனால் மெகா ஏலத்தை இந்திய நேரப்படி மதியத்திற்கு பின் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக டெஸ்ட் போட்டி மற்றும் ஐபிஎல் மெகா ஏலம் இரண்டையும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பங்கேற்க 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,165 இந்திய வீரர்கள், 409 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீஸில் இருந்து 33 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 39 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தானில் இருந்து தலா 29 வீரர்களும், அமெரிக்காவில் இருந்து 10 வீரர்களும், வங்கதேசத்தில் இருந்து 13 வீரர்களும் பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக இத்தாலி நாட்டில் இருந்து ஒரு வீரரும் பதிவு செய்துள்ளார். அதேபோல் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் பதிவு செய்துள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/ambanis-plan-chahal-or-washington-sundar-mumbai-need-spinners/
அவரின் அடிப்படை விலையாக ரூ.1.25 கோடி நிர்ணயித்துள்ளார். 42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், திடீரென ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பி இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மெகா ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யவில்லை. இதனால் அவரால் 2026ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் விதிகளின்படி மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை என்றால், அந்த வெளிநாட்டு வீரர் மினி ஏலத்தில் பங்கேற்பதில் இருந்து 2 ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவார். அதேபோல் ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இளம் வீரர் பிரித்வி ஷா தனது அடிப்படை தொகையாக ரூ.75 லட்சம் மட்டுமே நிர்ணயித்துள்ளார். சர்ஃபராஸ் கானும் ரூ.75 லட்சத்தை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ள நிலையில், பெரும்பாலான இந்திய வீரர்கள் தங்களின் அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்துள்ளனர். இம்முறை ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், அஸ்வின், சாஹல், முகமது ஷமி உள்ளிட்டோர் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.