கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள பட்டாசு குடோனில் கடந்த ஜூலை, 29ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 9 பேர் பலியாகினர்.15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் சரயு, எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திலேயே அருகில் இருந்த ஓட்டலில் கேஸ் சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் என போலீசாரும், மாவட்ட ஆட்சியரும், சம்பவ இடத்தை பார்வையிட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் அடுத்தடுத்து கூறியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் மதியழகன் எம்.எல்.ஏ., இவரது கல்குவாரிக்கு பட்டாசு குடோனிலிருந்து வெடிமருந்து சப்ளை ஆனதாகவும், பட்டாசு குடோன் நடத்தி வந்த பாம் ரவி எனப்படும் ரவி அபாயகரமான வெடிப்பொருட்களை வைத்திருந்ததாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
அதிமுக ராஜ்யசபா எம்பி கிருஷ்ணகிரி வெடிவிபத்து குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கிருஷ்ணகிரி வெடி விபத்து கேஸ் சிலிண்டரால் ஏற்படவில்லை என விளக்கம் அளித்தார். மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
சாலைகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு …
இந்நிலையில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக, இந்திய குடியரசு (சிவராஜ்) உள்ளிட்ட கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி முழுவதும் தலித் மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் * கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்தில் கேஸ் சிலிண்டர் கசிவு என காரணம் காட்டி திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் எம் எல் ஏ வை காப்பாற்ற முயலும் திமுக அரசை கண்டிக்கிறோம்.
ஒன்பது பேர் வெடி விபத்தில் இறந்த நிலையில் விசாரணை அறிக்கை வழங்காததை கண்டிக்கிறோம்.
உண்மைகள் தெரிய சிபிஐ விசாரணை வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்களுடன் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட செயலாளர் மதியழகன் எம் எல் ஏ வின் விசுவாசிகள் அவசர அவசரமாக போஸ்டர்களை கிழித்தனர். பாராளுமன்றம் வரை உலுக்கிய கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதையும் விசாரணை அறிக்கை உடனே வெளியிட வேண்டும் எனவும் முடியாத பட்சத்தில் மத்திய அரசு தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.