ஓடோடி வந்த ஜெயக்குமார்.! எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட்.!

0
88
ஜெயக்குமார்

சென்னை: சென்னையில் எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். எம்.ஜி.ஆர் சிலையில் இருந்த பெயிண்டை சுத்தம் செய்து பால் அபிஷேகம் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை ராயபுரம் பகுதி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள காளிங்கராயன் தெருவில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மார்பளவு சிலை அமைந்துள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த சிலையை திறந்து வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் நினைவு நாள், அதிமுக கட்சி தொடங்கப்பட்ட நாள் ஆகிய தினங்களில் ஏராளமான தலைவர்கள் தொண்டர்கள், இந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். சிறப்பு நாட்களில் மட்டுமல்லாது நாள்தோறும் அப்பகுதி அதிமுகவினர் மாலை அணிவிப்பது வழக்கம்.

இந்த நிலையில் இந்த எம்ஜிஆரின் சிலையில் மர்ம நபர்கள் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராயபுரம் அதிமுகவினர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் பற்றி அறிந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் அப்பகுதியில் திரண்டனர். எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அங்கு பார்வையிட்டார். பின்னர், சிலையில் மீது ஊற்றப்பட்ட பெயிண்டை தின்னர் வைத்து துடைத்து சுத்தம் செய்த ஜெயக்குமார், பால் ஊற்றி அபிஷேகம் செய்தார். பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அதிமுகவினர் கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், எம்.ஜி.ஆரை தெய்வமாக பார்க்கிறோம். எம்.ஜி.ஆர் மறைந்து 35 ஆண்டுகள் கடந்தும் அவர் மீது பயம் உள்ளது. அதிமுகவை எதிர்க்கத் திராணியற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பெயிண்ட் ஊற்றி எம்.ஜி.ஆரின் புகழை மறைக்க முடியாது.
பெயிண்ட் ஊற்றிய உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் பூசியவர் லியோ நார்ட் என்பவர் என்றும், அவர உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here