தேனி போலீசார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான், ஜெயலலிதா படம், அதிமுக கொடியுடன் அந்த கார் வந்தது. அந்த காரை நிறுத்தி, அதனுள் திறந்து பார்த்தால்? பணத்தை இரட்டிப்பு செய்து தருவதற்கு பெயர் டப்ளிங் என்பார்கள். இது ஒரு மோசடி வேலையாகும். கிரிமினல் குற்றமாகும். ஆனாலும், பணத்தாசை பிடித்தவர்கள், மோசடி பேர்வழிகளை நம்பி தங்கள் பணத்தை தொலைத்து வருகிறார்கள். இப்படித்தான், தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகரில், பணத்தை இரட்டிப்பு தருவதாக சொல்லியிருக்கிறார்கள். இப்படி சொன்னது ஒரு மாந்திரிக கும்பல். இதை நம்பி தேனி பகுதியில் உள்ள சிலர், தங்கள் பணத்தை இந்த கும்பலிடம் தந்துள்ளனர்.
டப்ளிங்:
இந்நிலையில், இந்த தகவல் அதற்குள் போலீசாருக்கும் தெரிந்துவிட்டது. தொடர் புகார்கள் வந்ததையடுத்து, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று, உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி தலைமையில் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெயலலிதா போட்டோ மற்றும் அதிமுக கொடியுடன் ஒரு கார் வரவும், அதை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு மூட்டை இருந்திருக்கிறது. அந்த மூட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். மூட்டை முழுவதுமே மனித உறுப்புகள் இருந்திருக்கிறது. நாக்கு, கல்லீரல், மூளை போன்றவை ரத்தம் தோய்ந்த நிலையில் இருந்துள்ளது. அத்துடன், எலுமிச்சம்பழம், கற்பூரம், முட்டையும் இருந்திருக்கிறது. இதைப்பார்த்து பதறிய போலீசார் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணை:
மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (39), கமுதியைச் சேர்ந்த டேவிட் பிரதாப் சிங் (40), பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன் (65) ஆகியோர் அந்த காரில் வந்துள்ளனர்.
இவர்களையும் உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போதுதான், அனைவருக்கும் மூளையாக செயல்படும் ஜேம்ஸ் என்பவரது பெயர் விசாரணையின்போது அடிபட்டது. ஜேம்ஸுக்கு 52 வயதாகிறது. இவர்தான் பெரிய மந்திரவாதி. உத்தமபாளையம் பாறைமேடு தெருவில் வசித்து வருகிறார். பணத்தை இரட்டிப்பு செய்வதாக சொல்லி பண மோசடியில் ஈடுபட்டுவந்ததால், ஜேம்ஸ் மீது ஏற்கனவே நிறைய கேஸ்கள் நிலுவையில் உள்ளன.
மந்திரவாதி:
இந்நிலையில்தான், ஜேம்ஸின் வலையில், 3 பேர் விழுந்துள்ளனர். நள்ளிரவில் பூஜை செய்தால் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகலாம் என்று ஜேம்ஸ் சொன்னதை கேட்டு அவர்களும் நம்பி உள்ளனர்.
கேரள மாநிலம் வண்டிப் பெரியாறில் உள்ள ஒருவரிடம் ரூ.2.50 லட்சத்தை தந்துவிட்டு வாருங்கள். அவர் ஒரு சூட்கேஸ் தருவார். அதை வாங்கி வாருங்கள், ஆனால் திறந்து பார்க்கக்கூடாது.
அப்போதுதான் நீங்கள் கோடீஸ்வரராகலாம் என்று ஜேம்ஸ் சொன்னாராம். அதன்படியே இவர்களும் கேரளா சென்று பணத்தை தந்து, அவர் தந்த சூட்கேஸினை வாங்கி வந்துள்ளனர். ஜேம்ஸ் சொன்னபடியே, அந்த சூட்கேஸை திறந்து பார்க்காமலும் இருந்துள்ளனர். வரும்வழியில்தான், போலீசாரிடம் சிக்கி இருக்கிறார்கள்.
மனித உறுப்புகள்:
காரில் கைப்பற்றப்பட்ட உறுப்புகளை பார்த்ததுமே, அந்த 3 பேருமே நடுநடுங்கி போனார்கள். அந்த உறுப்புகள் யாருடையது? மனித உறுப்புகளா? மிருகங்களின் உறுப்புகளா? என்பதை கண்டறிய மதுரையில் உள்ள தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். அந்த ரிசல்ட் வந்தால்தான், இதுகுறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவரும். இப்போது விஷயம் என்னவென்றால், மந்திரவாதி ஜேம்ஸ் எஸ்கேப். எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரையும் தேடி கொண்டிருக்கிறார்கள். அவர் பிடிபட்டால், எத்தனை பேரை ஏமாற்றி, எவ்வளவு மோசடி செய்தார் என்பது இனிமேல்தான் தெரியவரும் என்கிறார்கள் நம் போலீசார்.