தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய இரு பெண்களை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், அடுத்த நாங்குனேரி அருகே டோனாவூரைச் சேர்ந்தவர் சுந்தரி (39). மதுரை ரயில்வே நிலையம் பகுதியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்று வந்தார். 10 நாட்களாக மேலமாசி வீதியில் உள்ள பள்ளிவாசல் முன்பு யாசகம் பெற்று வந்த சுந்தரி,

கடந்த 23 ஆம் தேதி இரவு 11 மணியளவில் அதேபகுதியில் 6 மாத பெண் குழந்தை சக்திபிரியா உள்ளிட்ட தனது 3 குழந்தைகளுடன் தூங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் எழுந்து பார்த்த போது, 6 மாத குழந்தையான சக்திபிரியாவை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சுந்தரியிடம் விசாரித்ததில், சில தினங்களுக்கு முன் பெண் குழந்தையை கொடுத்தால், பணம் கொடுப்பதாக சிலர் ஆசை வார்த்தை கூறியதும், அதற்கு அவர் மறுத்ததும் போலீசாருக்கு தெரிந்தது.
இதை அடுத்து, மேலமாசி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், சுந்தரியிடம் காண்பித்து பேரம் பேசிய நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த சுந்தரி, தன்னிடம் குழந்தையை கேட்ட 2 பெண்களை அடையாளம் காட்டினார்.
அந்த பெண்கள் வந்த டூவீலரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், மதுரை மாவட்டம் மேலப் பனங்காடியைச் சேர்ந்த செந்தாமரை மற்றும் அவரது உறவினரான சோழவந்தான் இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி ஆகியோர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.
இதை அடுத்து இருவரையும் நேற்று அதிகாலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், சுந்தரி குழந்தையை கொடுக்க மறுத்ததால் கடத்தியதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.