சோழ மன்னர்களால் தஞ்சையை சுற்றி அஷ்ட சக்திகள் நிறுவப்பட்டது. அதில் முதன்மையான சக்தியாக தஞ்சாவூர்அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் உள்ளது. புற்று மண்ணால் ஆன அம்மனுக்கு அபிஷேகங்கள் எதுவும் நடைபெறாது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலாபிஷேகம் மட்டுமே சிறப்பாக நடைபெறும். இத்தகைய பிரசித்தி பெற்ற ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும் .ஆவணி ஞாயிறு அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து ஆலயங்களில் தங்கி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதேபோல் ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அம்மனுக்கு விளக்கேற்றி, மாவிளக்கு போட்டு தங்கள் பரிகாரங்களை செய்து அம்மனை வழிபட்டனர். கோவிலில் பக்தர்களின் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன.