கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் உலகை குலுக்கிய ஒரு பேரதிர்ச்சி. ஒரு உயிர் இயற்கைக்கு எதிராக இறந்தாலும் அது தவறானது தான் அதற்கு பொறுப்பிற்கு வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இன்னமும் கூட 30க்கும் மேற்பட்டவர்கள் பேராபத்தின் விளிம்பில் இருப்பது அறிய வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் இனிமேல் இதுபோல நடக்காமல் தடுக்க வேண்டும் என்கிற விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கிறது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 22 உயிர்கள் அஜாக்கிரதையால் இறந்து போனதை நாம் அறிவோம். இது மட்டும் அல்ல சாராய உயிரிழப்பு தமிழகத்தின் பல மாவட்டங்களில் எழுதப்படாத விதியாகவே இருந்து வருவதையும் நாம் அறிவோம். இதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோரையும் போல நாமும் இனிமேல் இதுபோல நடக்காமல் இருக்க அரசு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிற பதிலை சொல்ல விரும்பவில்லை. காரணம்? ஏற்கனவே விழிப்புணர்வு இல்லாமலே அரசு நடந்து இருப்பதை வெளிப்படுத்துகிறது இது போன்ற சம்பவங்கள்.

அதுபோல இறந்த குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண உதவி என்பது கூட இந்த சம்பவங்களை ஊக்குவிப்பது போல ஆகிவிடும் என்பது தான்.இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை ஆனாலும் கூட அந்த பணத்தை பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக கொடுக்கிற வரிப்பணத்தில் இருந்து எடுத்துக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். அலட்சியப்போக்கோடு செயல்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளிடமிருந்து மீட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவது தான் சிறந்தது. அதைவிடு யாரோ செய்கிற சில தவறுகளுக்காக ஒட்டுமொத்த மனித சமூகமும் சேர்ந்து இழப்பீடு வழங்குவது என்பது எந்த விதத்தில் நியாயம். எப்படி இருந்தாலும் மனித சமூக வரலாற்றில் கள்ளக்குறிச்சி, மரக்காணம், பண்ருட்டி போன்ற சம்பவங்கள் ஒரு பெரும் கரும்புள்ளியாகவே கருதப்படுகிறது நாமும் அதை கரும்புள்ளியாகவே கருதுகிறோம்.
இறந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அக்கறை செலுத்துகிற அரசு போதை மறுவாழ்வு மையங்களை அமைத்து மக்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். உயிர் இழப்புக்கு காரணமானது மெத்தனால், எத்தனால், காய்ச்சிய சாராயம் என்பதில் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு எங்கிருந்து விநியோகம் செய்யப்பட்டது யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் அக்கறை செலுத்த வேண்டும். சாராயத்தால் இனியும் ஒரு உயிர் போகிறது என்றால் அதற்கு ஒட்டுமொத்த காரணமும் அரசு நடத்துகிற அரசியல்வாதிகள்தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை நமக்கும்.
ஆசிரியர்
தி நியூஸ் கலெக்ட்