உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கைத்துப்பாக்கி கேட்டு விஏஓக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு அரசின் உள்துறை, காவல்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மணல் கொள்ளையை தட்டிக் கேட்ட அரசு அதிகாரி அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவத்தால் சாமானிய மக்கள் அதிர்ச்சியில் உறைந்தளனர். சட்டவிரோத செயல்களை தட்டிக் கேட்கும் அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அரசிடம் முக்கிய கோரிக்கையை வைத்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதினர். நேர்மையான அதிகாரிகள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், விஏஓக்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை, காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
வருவாய்த்துறையின் கீழ் வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலாளர் தி.வைதேகி கடிதம் எழுதியுள்ளார். அதில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பிற்காக கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த நிலுவையில் உள்ள புகார்கள் தொடர்பான விவரங்களை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என அக்கடிதத்தில் அனுப்பி இருந்தார்.
இதையடுத்து, காவல்துறை டிஜிபி, இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஏஓக்கள் கோரிக்கை விடுத்தபடி அவர்களின் தற்காப்புக்காக கைத்துப்பாக்கிகள் வழங்கப்படுமா? அல்லது வேறு ஏதேனும்
பாதுகாப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.