வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”விவசாயத்திற்காக மழையை மட்டுமே நம்பியிருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அடர்ந்து வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழைநீரை குளம், கண்மாய் போன்றவற்றில் சேமித்து வைத்தாலும் சீமைக் கருவேல மரங்களின் வேர்களால் உறிஞ்சப்படுவதால் மழைநீரையும் சேமிக்க முடியாத சூழலில் சிக்கி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பணம் கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய அளவுக்கு வறட்சி நிலவ முக்கிய காரணமான சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் சீமைக் கருவேல மரங்களை தனிக்குழு அமைத்து முற்றிலுமாக அகற்றி விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.