தன் நிலத்திலேயே தன்னை புதைக்க வேண்டும் என்ற தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதால் அவரின் ஆன்மா சாந்தி அடைய அவர் நிலத்திலேயே கோவில் கட்டி சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தி வழிபடும் உறவினர்கள் .
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம், தாண்டாகவுண்டன்புதூர் அருகேயுள்ள அத்திமரத்து குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பூசாரி அய்யமுத்து; இவரின் மனைவி அய்யம்மாள்.
அய்யமுத்து இந்த பகுதியில் உள்ள இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் பணி செய்து, மக்களுக்கு வாக்குச் சொல்லி வந்துள்ளார்.
அய்யம்மாள் கடந்த 22.12.2020 ம் ஆண்டு காலமானார். இதை தொடர்ந்து, கடந்த 12.08.2022ம் ஆண்டு பூசாரி அய்யமுத்து காலமானார்.
பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டாகவே பூசாரியின் ஆன்மா சாந்தி அடையவில்லை என்பதை உறவினர்கள் பல்வேறு தருணங்களில், உறவினர்களுக்கு கனவில் உணர்த்தியதாக கூறப்படுகிறது.
இதனால் தவறை உணர்ந்த உறவினர்கள் பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும் போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என கூறினாரோ, அதே இடத்தில் அய்யமுத்து – அய்யமாலுக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதன்படி கோவில் கட்டி சிலை வைத்து கும்பாமி ஷகம் நடத்தினர்.
பூசாரி அய்யமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, 12-8-23 அய்யமுத்து – அய்யமாளின் கோவில் முன்பாக, வேம்பரசு மரத்தின் அடியில் விநாயகர் சிலை வைத்து மகா கும்பாபிஷேகம் விழாவை வெகு விமர்சையாக நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அய்யமுத்து – அய்யம்மாள் சிலைகளுக்கு பூஜைகள் செய்து குடும்பத்துடன் வழிபட்டனர்.
சிலை செய்யும் சிற்ப வடிவமைப்பாளர் கடவுளின் சிலைகளைத் தவிர வேறு சிலைகளை செய்வது இல்லை.
இருப்பினும் இவர்களின் உறவுகளின் பாசத்தை அறிந்த, சேலம் மாவட்டம், தம்பம்பட்டியைச் சேர்ந்த சிலை சிற்பி அருண்குமார் முதல் முறையாக பூசாரி அய்யமுத்து – அய்யம்மாள் தம்பதிக்கு சிலை வடித்தாக பெருமிதம் கொண்டார்.
இன்றைய நாகரீக உலகத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து வழிபட தவிர்க்கும் உறவினர்கள் மத்தியில் இறந்த தாத்தா பாட்டிக்கு சிலை வைத்து வழிபடும் பேரன்,பேத்திகள் உறவினர்ளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.