- நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அந்த உத்தரவில், கூறியுள்ளதாவது..
“மனுதாரரின் சர்ச்சைக்குரிய அறிக்கையை பரிசீலித்ததில், தெலுங்கு பேசும் மக்களை, ராஜாவின் மனைவிகள் மற்றும் அந்தப்புரத்திலிருப்பவர்களுக்கு சேவை செய்ய தமிழகத்திற்கு வந்தவர்கள் என மனுதாரர் விவரித்திருப்பது தெரிகிறது.

பேச்சு சுதந்திரம் அடிப்படை உரிமை. இது தனிநபர்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்த அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும் இந்த பேச்சுரிமை பொறுப்பையும் கொண்டுள்ளது. சுதந்திரமாகப் பேசும் உரிமையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. பேச்சுரிமை எனும் பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது.
பொது மேடைகளில் இதுபோன்ற பிரச்சனைகளை பேசுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். குறிப்பாக சமூக வலைதளங்களில் பேசப்படுபவை நிரந்தர பதிவாகிவிடும்.பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மொழியின் அடிப்படையில் இழிவுபடுத்தும் போது சகிப்புத்தன்மை ஆக இருக்க வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளில், பொது நலனையே நீதிமன்றத்தின் மனதில் கொள்ளும். இதுபோன்ற கீழ்த்தரமான அறிக்கைகள் வெளியிடப்படும்போது நீதிமன்றம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது மோசமான முன்மாதிரியை உருவாக்கிவிடும்.
இதுபோன்ற கேவலமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவது இனிமேல் ஏற்றுக் கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும்.
இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் இது மாதிரியான வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிவிட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக மன்னிப்பு கோரலாம் என்றாகிவிடும்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/madras-high-court-refuses-to-hear-two-newly-filed-cases-against-deputy-chief-minister-udayanidhi-stalin/
உங்கள் வார்த்தைகளை கருணைஎயுடன் கையாளுங்கள். பிரிவினையை காட்டிலும் இரக்கத்தை வளர்க்கும் உரையாடல்களை மேற்கொள்வோம். அவ்வாறு செய்வதன் மூலம், பேச்சு சுதந்திரத்தின் உண்மையான சாராம்சத்தை மதிப்போம். ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான கருவியாக அதனை பயன்படுத்துவோம் என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.