உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுற்றுலா ரெயிலில் 2 பெட்டிகள் மதுரை ரெயில் நிலையத்துக்கு முன்னதாகவே 1 கிலோ மீட்டர் தொலைவில் பிரித்து தனி தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிக களைப்புடன் அயர்ந்து தூங்கினர்.
சிலர் காலை கடன்களை முடிப்பதற்காக ரெயில் பெட்டிகளில் இருந்து இறங்கி நின்றனர். இந்த நிலையில் சிலர் டீ, காபி கேட்டதால் அடுப்புகள் பற்ற வைக்கப்பட்டன. இந்த நேரத்தில் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த இன்னொரு சிலிண்டரும் வெடித்துச் சிதறியதால் ரெயில் பெட்டி முழுவதும் தீயில் கருகி சாம்பலானது.
பயணம் செய்த சிலர் அலறியடித்து உயிர் தப்பிய நிலையில் 9 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 15 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தென்னக ரெயில்வே முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைக்க மளிகை பொருட்கள், சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வருவது வழக்கம்.
ஆனால் ரெயில்வே விதிப்படி ரெயில் பெட்டிக்குள் தீப்பற்றக்கூடிய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் பயணிகள் ஈடுபடக்கூடாது என்பது கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக இந்த ரெயில் பெட்டிகளில் தான் இவர்கள் சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்படியே மதுரையிலும் சமையல் செய்ய தீப்பற்ற வைத்தபோது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ரெயிலில் ரெயில்வே விதியை மீறி சுற்றுலா பயணிகள் அடுப்பு மற்றும் சிலிண்டர்களை எடுத்து வந்தது எப்படி? இதனை ரெயில்வே அதிகாரிகள் கண்காணிக்க தவறி விட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக ரெயிலில் பயணிகள் ஏறும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதையும் எடுத்து வருகிறார்களா? என்பதை ரெயில்வே ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். அந்த வகையில் இந்த சுற்றுலா பயணிகளை சம்பந்தப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் கண்காணிக்க தவறிவிட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் வெடித்துச்சிதறியது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சிலிண்டர்கள் எங்கு வாங்கப்பட்டுள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக வீட்டு உபயோக சிலிண்டர்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.
மேலும் பொது இடங்களிலோ, எளிதில் தீப்பற்றக் கூடிய பகுதிகளிலோ இந்த சிலிண்டர்களை வைத்து அடுப்புகள் பற்ற வைக்கக்கூடாது. ரெயில் பெட்டிக்குள் எவ்வித அனுமதியும் இன்றி ரெயில்வே விதிகளை மீறி கியாஸ் அடுப்புகளை பற்ற வைத்தது தான் இந்த தீ விபத்துக்கான முழு காரணம் என்றும் சுற்றுலா பயணிகளின் விதிமுறை மீறல் காரணமாக இந்த கொடூர தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரெயில் பெட்டியில் தீ விபத்து நடந்த சம்பவம் ரெயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு தள்ளி நடைபெற்றதால் மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல ரெயில்கள் தப்பின. பெரும் சேதமும் தவிர்க்கப்பட்டது.