எது நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிந்தாக வேண்டும் – மேயர் பிரியா

0
88
மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா காலை சிற்றுண்டி திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது தொடர்பாக நன்றி தெரிவிக்கக்கோரி பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்த் எழுந்து கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க. மட்டுமின்றி காங்கிரஸ் உறுப்பினர்கள் எம்.எஸ். திரவியம், ராஜசேகரன் உள்ளிட்டோர் பலர் எழுந்து எதிர்த்து குரல் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து உமா ஆனந்த் வெளிநடப்பு செய்தார்.

 

கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் (24-வது வார்டு) சேட்டு பேசும்போது, எனது வார்டில் தனியார் நிறுவனம் ஒன்று கியாஸ் பைப்லைன் ரோட்டில் பதித்து செல்கிறது. அது என்ன திட்டம், யார் போடுகிறார்கள் என்ற எந்த தகவலும் எனக்கு தெரியாது. ஆனால் கியாஸ் பைப் வெடித்து அசம்பாவித சம்பவம் நடந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது எங்களை வந்து கேட்பார்கள்.

வார்டுகளில் எந்த பணி நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். அவரது கருத்திற்கு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து ஒருமித்த குரலாக எழுப்பினர். வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பது இல்லை என்றும் பிரச்சனை வந்தால் மட்டும் எங்களிடம் கூறுகிறார்கள் என்று தி.மு.க. கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், ஒவ்வொரு வார்டில் நடக்கும் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த பணி நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு கேட்பதற்கு உரிமை உள்ளது. கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்ல 5 நிமிடங்கள் ஆகும். எந்த பணி நடந்தாலும் தகவல் தெரிவியுங்கள் என்றார். துணை மேயர் மகேஷ் குமார் பேசும்போது, சாலைப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அப்போது தான் அவர்கள் கண்காணிப்பார்கள் என்றார். கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, சென்னை நகரம் 476 சதுர கி.மீ. தூரம் வளர்ந்துள்ளது. அதனால் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில் அதிகாரிகளுக்கு என்ன கஷ்டம், ஆய்வு பணிகள், வளர்ச்சி பணிகள், எது நடந்தாலும் கட்டாயம் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.  

கூட்டத்தில் கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு பிரபல கர்நாடகா சங்கீத இசையமைப்பாளர் டாக்டர் எம்.பால முரளி கிருஷ்ணா மேம்பாலம் என பெயர் மாற்றம், 130-வது வார்டில் உள்ள குமரன் நகர் பிரதான சாலைக்கு “மாண்டோவின் ஸ்ரீநிவாஸ் பிரதான சாலை” என பெயர் மாற்றம், மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் ஓய்வுபெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு 50 சதவீத சலுகை, கொடுங்கையூர், பெருங்குடியில் பொது, தனியார் கூட்டாண்மை முறையில் பயோ-சி.எஸ்.ஜி. ஆலை உரம் தயாரிக்கும் அழகு பொருள் மீட்பு வசதி மற்றும் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் வசதி ஆகியவற்றிற்கு திட்ட அறிக்கை தயார் செய்வது உள்ளிட்ட 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here