மேகதாதுவில் அணை: அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் கோரிக்கை

0
88
மேகதாது

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் துவங்கிவிட்டதாக செய்திகள் வருகிறது. அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”கர்நாடக அரசு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் தங்கள் நிலையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து மேகதாதுவில் அணைக்கட்டும் பணியில் ஈடுபடுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காதபோதும் மாற்றுவழியை தேடுகிறது. கர்நாடக மாநிலம், 29 வனத்துறை அதிகாரிகளை நியமித்து நிலஅளவிடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஜி.கே.வாசன்

தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் இருப்பதால் மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்க கூடாது. காவிரி நீர் என்பது தமிழக விவசாயிகளின் உயிர்நீர். இவற்றில் அரசியலை புகுத்தக் கூடாது. கர்நாடக அரசு கடந்த மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீருக்கு பதிலாக 11 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வீணாகியுள்ளது. நேரடி விதைப்பு விட்டவர்களும், நாற்றங்காலில் விதை விதைத்தவர்களும் போதிய தண்ணீர் இல்லாமல் அவற்றை நடவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

தற்பொழுது தமிழக விவசாயிகளின் நிலைமை இப்படி இருக்க, மேகதாதுவில் அணைக்கட்டினால் “மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானைக்கட்டிப் போரடித்த தமிழகம்’ பொருளாதார வீழ்ச்சி மற்றும் உணவுத்தட்டுப்பாடு என்று மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் பிரச்சனையில் உரிய ஆலோசனை செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here