டெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் பேச உள்ளார். இன்று அவைக்கு வந்த பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்பி ஆதிரஞ்சன் சவுத்திரி அவரை கிண்டலடித்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் சார்பில் அசாம் மாநில எம்.பி கெளரவ் கோகாய் மீண்டும் முன்மொழிந்து முதலில் உரையை தொடங்கினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்., எம்.பி., ராகுல்காந்தி தொடங்கி வைத்து பேசுவதாக இருந்தது. ஆனால் ராகுல் நேற்று பேசவில்லை.
இதையடுத்து நேற்று, பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மணிப்பூர் அகதி முகாமில் ஒரு தாய், தன்னுடைய மகன் சடலத்துடன் ஒருநாள் முழுவதும் படுத்திருந்தேன் என தெரிவித்தார். நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர்
மாநிலத்தை கைவிட்டு விட்டார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது. பாஜகவினர் பாரதமாதாவின் காவலர்கள் அல்ல, மாறாக அவளை கொலை செய்த கொலைகாரர்கள். இந்தியா என்ற கருத்தோட்டத்தை மணிப்பூரில் அழித்துவிட்டனர். நாடு முழுவதும் நான் மேற்கொண்ட ‘இந்திய ஒற்றுமை நடைபயணம்’ இன்னும் நிறைவடையவில்லை., என்று கூறினார்.
நிர்மலா சீதாராமன் உரை:
இன்று நிர்மலா சீதாராமன் அதற்கு பதில் அளித்து பேசுகையில், மாற்றம் என்பது வார்த்தைகளால் உருவாகக் கூடாது. நடை முறைகளின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். மக்களுக்கு கனவுகளில்தான் உங்கள் வாக்குறுதிகளைக் காட்டின. நாங்கள் அந்த கனவுகளை நிறைவேற்றி காட்டுகிறோம். 2014, 2019-ல் மக்களே ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை மேற்கொண்டிருந்தனர். அடுத்த 2024 தேர்தலிலும் இதே நிலைமைதான் இருக்கப் போகிறது.
மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டதைப் போல எதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரை இந்தியா என மாற்றினீர்கள்? என்ன அவசியம்?. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ 1627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது. மத்திய அரசின் கடனுதவி திட்டம்- தம்ழிநாடு அரசுக்கு எந்த கடனும் இல்லை. அதனால் தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம். பொதுவாக 750 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர், என்றார்.
மோடி வருகை:
இதையடுத்து பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் பேச உள்ளார். இதற்கு முன்பாக அவர் அவைக்கு 3 மணி அளவில் வருகை புரிந்தார். அப்போது பாஜக எம்பிக்கள்
மோடி மோடி என்று அவரை வரவேற்றனர். இதையடுத்து அமித் ஷா எழுந்து நேற்று நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் எம்பி ஆதிரஞ்சன் சவுத்திரி, மோடி இன்னொரு முறை கூட பிரதமராக்கட்டும். அதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அவரால் மக்களுக்கு தொந்தரவு இருக்க கூடாது. ஏழை மக்கள் அவரால் பாதிக்க கூடாது. நீரவ் மோடி ஓடி விட்டார் என்று நினைத்தேன். அவரை நம்மால் பிடிக்க முடியவில்லை என்று நினைத்தேன். ஆனால் எனக்கு நரேந்திர மோடியை தெரியும். அவரும் ஓடிவிட்டார். அவர் மணிப்பூர் பிரச்சனைகளை பார்க்காமல், நாடாளுமன்றத்திற்கு வராமல் இத்தனை நாட்கள் ஓடி ஒளிந்து கொண்டார், என்று கிண்டலாக பேசினார்.
கோபம்:
இதை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா. காங்கிரஸ் எம்பி ஆதிரஞ்சன் சவுத்திரி பேசியது தவறு. நீங்கள் உட்காருங்கள். நீங்கள் இப்படி பேச கூடாது. உடனே உட்காருங்கள். உங்கள் பேச்சு விதிகளை மீறியது என்று கூறி கடும் விமர்சனம் வைத்தார். இதை தொடர்ந்து காங்., எம்பி., ஆதிரஞ்சன் சவுத்திரி பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.