சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்ன விசேஷம் இந்த திருவிழாவில்? சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாக்கை உய்ய வந்தம்மன் கோயில் திருவிழாவையொட்டி 20,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ குணம் கொண்ட அசைவ ரச விருந்து வழங்கப்பட்டது. காரைக்குடி அருகே சாக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாக்கை உய்யவந்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மாதந்தோறும் திருவிழா நடப்பது வழக்கம்.
ஆடிப்படையல்:
அந்தவகையில், ஆடி மாதம் என்பதால், உய்யவந்தம்மன் கோயிலில் இந்த வருடமும் திருவிழா நடந்தது. ஆடி படையலை முன்னிட்டு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சாக்கை நாட்டார்கள் நேற்றிரவு சாரைசாரையாக திரண்டுவர ஆரம்பித்துவிட்டனர். சாக்கோட்டை, புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, சாக்கவயல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 20000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அனைவரும் சேர்ந்து, இன்று விடிகாலையில் கிட்டத்தட்ட 80 ஆடுகளை பலியிட்டு தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். பிறகு, பலியிடப்பட்ட கிடாய்கள் மூலம், விருந்து தயாரானது.
அசைவ ரசம்:
ஆனால், இந்த திருவிழாவில் என்ன விசேஷல் என்றால், முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியே சமையல் செய்யப்பட்டது. குறிப்பாக, மருத்துவ குணம் கொண்ட பூண்டு, சின்ன வெங்காயத்தை உரித்து, உரலிலேயே இடித்து, சமையலில் சேர்த்தார்கள். அதேபோல தக்காளிப்பழத்தையும் உரலிலேயே அரைத்து, ரசம் வைத்தார்கள். ஆனால், இது அசைவ ரசம். இஞ்சி, பூண்டு, தக்காளியை சேர்த்து வைப்பது. இதனால் சமைக்கும்போதே, வாசனை மூக்கை துளைத்து கொண்டு போனது. கமகமக்கும் அசைவ ரசம் மிகப்பெரிய அண்டாகளில் தயாரானது. இதற்கு பிறகு 2600 கிலோ அரிசியை போட்டு சாதம் வடித்தார்கள். இறுதியில், உய்ய வந்த அம்மனுக்கு அசைவ படையிலிட்டு வேண்டுதல் நிறைவேற்றினார்கள் பக்தர்கள்.
பாக்குமட்டை:
இறுதியில் திருவிழாவில் பங்கேற்ற 20000 க்கும் மேற்பட்டவர்களுக்கு
அசைவ ரச விருந்து பரிமாறப்பட்டது. இதிலும் ஒரு விசேஷம் என்னவென்றால், பாக்கு மட்டையாலேயே தட்டுக்கள் தயாராகி உள்ளன. இந்த பாக்கு மட்டை தட்டில்தான், மருத்துவ குணம் கொண்ட அசைவ ரச விருந்து பரிமாறப்பட்டது. சாயங்காலம் தொடங்கிய இந்த அசைவ விருந்து நள்ளிரவு வரை நீடித்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் நின்று, திருப்தியாக விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.