தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம், அரசியல் களத்தில் இப்போது திடீர் டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது.
இதற்கு காரணம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என கடந்த சில நாட்களாக உலா வரும் தகவல்களே ஆகும். அதுமட்டுமல்ல தமிழகம் தழுவிய தனது பாதயாத்திரையை அண்ணாமலை ராமநாதபுரத்தில் தொடங்குவதும், அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ராமநாதபுரத்துக்கு அமித்ஷா வருகை தரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மீனவர் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் செல்வதோடு
தென் மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தையும் அங்கேயே நடத்தவுள்ளார்.
அண்ணாமலையை பொறுத்தவரை தனது நடைபயணத்தை திருச்செந்தூரிலிருந்து தான் தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார். இதனிடையே என்ன நடந்ததோ தெரியவில்லை, பாத யாத்திரை தொடங்கும் இடம் ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டு அமித்ஷாவும் வருகை தருகிறார்.
கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, திருவாடானை, பரமக்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.
இந்தத் தொகுதிக்குள் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயில், ஏர்வாடி தர்ஹா, பாம்பன் பாலம், ராமர் பாலம் என்று அழைக்கப்படும் மணல் திட்டுக்கள், தனுஷ்கோடி, என பல இடங்கள் உள்ளடக்கி இருக்கின்றன. தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகள் எப்படியோ தெரியவில்லை, ராமநாதபுரம் தொகுதியில் எப்பாடு பட்டாவது வெற்றிபெற்று விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு காரியமாற்றத் தொடங்கிவிட்டது தமிழக பாஜக.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து விடாபிடியாக சண்டை போட்டு ராமநாதபுரம் தொகுதியை வாங்கிய பாஜக, நயினார் நாகேந்திரனை வேட்பாளராக களமிறக்கியது.
ஆனால் அவரோ திமுக கூட்டணி வேட்பாளரான நவாஸ் கனியிடம் சுமார் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
ஆனாலும் இந்த முறை ராமநாதபுரம் தொகுதியில் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும் என அக்கட்சியினர் கடுமையாக மெனக்கெடுகின்றனர்.
கடந்த முறை கூட்டணிக் கட்சிக்கு கொடுத்ததால் இந்த முறை திமுகவே நேரடியாக ராமநாதபுரம் தொகுதியில் களம் காண வேண்டும் என அக்கட்சியினர் ஒரு பக்கம் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து உரிய அதிகாரிகளிடமும், அமைச்சகத்திடமும் உடனடியாக பேச வேண்டுமென்பதால், தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என லோக்கல் கட்சியினர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறுவதற்காக காத்திருக்கின்றனர்.
1951ஆம் தொடங்கி கடந்த 2019 வரை ஒரு தேர்தலில் கூட ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1980 கள் வரை காங்கிரசும் அதன் பிறகு திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முறையே மாறி மாறி வெற்றி பெற்று வருவதும் கவனிக்கத்தக்கது. மூக்கையா தேவர், கடலாடி சத்தியமூர்த்தி, மலைச்சாமி, ஜேகே ரித்தீஷ், அன்வர் ராஜா, போன்றோர் ராமநாதபுரம் தொகுதியின் இதுவரை எம்.பி.யாக இருந்தவர்களில் பரிச்சயம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.