இந்திய ரிசர்வ் வங்கி 2022 ஆம் ஆண்டு முதலே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது. கடந்த வாரம் G20 நிகழ்வில், RBI பிரதிநிதிகள் UPI QR குறியீடுகள் மூலம் eRupee பணம் செலுத்தும் முறையை ஜூலை மாத இறுதியில் கொண்டுவரும் என்று தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து டிஜிட்டல் கரன்சிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
360 Gadgets-ன் செய்தி தரவுகளின்படி பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை RBI உடன் நடந்து வரும் CBDC சோதனைகளில் பங்கேற்க உள்ளன. அதன் மூலம் சில்லறை வணிகர்கள் அவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள யூபிஐ மூலம் CBDC தேர்வையும் பெற முடியும்.
இந்தியாவின் பல வணிக நிறுவனங்கள் ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் இந்த சோதனை ஒட்டத்தில் பங்கேற்றுள்ளனர். CBDCகள் கிரிப்டோகரன்சிகள் போல செயல்படும். டிஜிட்டல் கரன்சிகள் ரிசர்வ் வங்கியால் அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை.
இந்தியாவில் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் ரூபாய் (Digital Rupee) புழக்கத்தில் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தி 2022 நவம்பர் 1ஆம் தேதி முதல் பெரிய பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்த அனுமதித்தது.
பின்னர் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சிறு பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் ரூபாய் பயன்பாடு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டின் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இனி அதிகாரப்பூர்வமாக யூபிஐ ஆப் மூலம் செலுத்தவும் ஆர்பிஐ ஏற்பாடு செய்துள்ளது.