தேனி: கொடநாடு விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனியில் நடந்த
ஆர்பாட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது. கடந்த 2017இல் கொடநாடு பங்களாவில் யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறின. அங்கு காவலாளியாக பணிபுரிந்தவர்
படுகொலை செய்யப்பட்ட நிலையில், அங்கு கொள்ளை சம்பவங்களும் அரங்கேறின.
கொடநாடு பங்களா என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் இடமாகும். அவர் முதல்வராக இருந்த போதிலும் சரி,
எதிர்க்கட்சியில் இருந்த போதும் இங்கே தான் அடிக்கடி சென்று ஓய்வெடுப்பார்.
கொடநாடு:
முன்னாள் முதல்வருக்கு சொந்தமான பங்களாவில் இப்படி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது அப்போது
மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஓம் பகதூர் என்ற காவலாளி படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், கொடநாடு பங்களாவுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்த போது மட்டும் மின்சாரமும் தடைப்பட்டது. இவை எல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கனகராஜ், சயான், மனோஜ் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இதில் குற்றஞ்சாட்டப்பட்டோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். மேலும், கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆப்ரேட்டராக பணிபுரிவந்தவரும் தற்கொலை செய்து கொண்டார். இப்படி அங்கு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் சினிமா படங்களில் வருவதை போலவே இருந்தது.
ஆர்பாட்டம்:
இந்த வழக்கை முதலில் போலீசார் விசாரணை செய்த நிலையில், அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும் பெரிய நடவடிக்கை இல்லை. நீலகிரி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடக்கும் நிலையில், கடந்த முறையே இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தாக்கல் செய்யவில்லை.
இதற்கிடையே கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஓபிஎஸ் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்திற்கு டிடிவி தினகரனும் ஆதரவு தெரிவித்த நிலையில், தேனியில் இருவரும் இணைந்து ஒன்றாக
இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் ஓபிஎஸ்- டிடிவி தினகரன் இருவரும் இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
காலில் விழுந்த ஓபிஎஸ் சகோதரர்:
தேனியில் நடந்த ஆர்பாட்டத்தில் ஓபிஎஸ்- டிடிவி தினகரன் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது டிடிவி தினகரன், கொடநாடு விவகாரம் குறித்தும் எடப்பாடி பழனிசாமி குறித்தும் மிக கடுமையாக விமர்சித்து பேசினார். தேர்தலுக்கு முன்பு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக சொன்ன ஸ்டாலின் இதில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதா டிடிவி தினகரன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா மேடைக்கு வந்தார். டிடிவி தினகரன் பேசிக் கொண்டிருந்த போது மேடைக்கு ஓ ராஜா வந்த நிலையில், டிடிவி தினகரனுக்கு மேடையில் வைத்து சால்வை அணிவித்தார். பிறகு மேடையிலேயே காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத டிடிவி தினகரன்
“ஐயோ.. அண்ணே” என்று பதறிப்போனார். இவை அனைத்தையும் அருகிலேயே இருந்த ஓ பன்னீர்செல்வம் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.