தமிழ்நாட்டில் பிரசாரத்துக்கு நேற்று வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதாக இருந்தது. ஆனால், திருமயத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் திருமயம் பயணம் ரத்தானது.

அதன்பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா, மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனை ஆதரித்து மாலை 6.45 மணிக்கு நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் பகுதியில் இருந்து தனது ரோடு ஷோ பிரசாரத்தை துவக்கினார்.
மதுரை ஆதீன மடம் பகுதியில் வந்த போது, அங்கு காத்திருந்த மதுரை ஆதீனம் பெரிய மாலையை அமித்ஷாவிடம் கொடுத்தார். அப்போது மாலையை வாங்கிய அமித்ஷா, அதை அப்படியே வேட்பாளர் கழுத்தில் போட்டுவிட்டார்.

அமித்ஷா வருகைக்காக மாலை 3.30 மணி முதலே பெண்கள் உள்ளிட்டோர் அழைத்து வரப்பட்டு காத்திருந்தனர். பிரதமர் மோடி வருகிறார் எனக்கூறி பெண்களை அழைத்து வந்தனர். ரோடு ஷோ நடந்த பகுதியில் இருந்த பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
இதனால், வழக்கமான சித்திரை திருவிழா வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதியடைந்தனர்.

மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மாற்று பாதைகளில் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பக்தர்கள் பெரும் அவதியடைந்தனர். கூட்டத்தை காட்டுவதற்காக சுமார் ஆயிரம் பேர் ரோடு ஷோ பகுதியில் நடந்து கொண்டே சென்று கூட்டத்தை காட்டினர்.