மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் மௌனம் காக்கும் அரசு.

0
83
  • மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இது குறித்து எதையும் தெளிவாக தெரிவிக்காமல் இருந்து வந்தது. இப்படி இருக்கையில், அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவும், 2028க்குள் தொகுதி வரையறை செய்து முடிக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு நாடும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது கட்டாயமாகும். இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த முடியும். கடந்த 10 ஆண்டுகளை விட இப்போது எந்த அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டால்தான், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், அரசு சேவை அலுவலகங்கள் போன்றவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, அல்லது, அதே நிலையில் தொடரவோ முடிவெடுக்க முடியும்.

ஆனால் இந்தியா கடந்த 2011க்கு பிறகு இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. சர்வதேச அளவில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2021ல் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இடையே கோவிட் பெருந்தொற்று குறுக்கிட்டதால் அதை நடத்த முடியவில்லை. கோவிட் பாதிப்பு முடிந்து மூன்று ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, இன்னமும் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தவில்லை. பக்கத்து நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்த காலங்களில் நடத்தி முடித்துவிட்டன. ஆனால் இன்னும் இந்தியா இதை செய்யாமல் இருந்தது, எதிர்க்கட்சிகளிடையே கடுமையான விமர்சனங்களை தூண்டியது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இதனையடுத்து கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மத்திய அரசு தரப்பிலிருந்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதாகவும், இதன் அடிப்படையில் 2028ம் ஆண்டுக்குள் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ஒருவழியாக மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டாலும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. இந்தியாவில் கடைசியாக 1931ம் ஆண்டுதான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தற்போது வரை தொடர்கின்றன. மறுபுறம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு என 33% இடஒதுக்கீடு அமல்படுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதுவுமே, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்து, தொகுதி மறுவரை செய்தால் மட்டுமே அமல்படுத்த முடியும். எனவே எல்லாவற்றிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய திறவுகோலாக இருக்கிறது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/anti-corruption-police-against-lottery-president-martin-his-wife-and-others-ordered-the-enforcement-department/

கணக்கெடுப்பு எடுப்பதன் மூலம், மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மக்களவை தொகுதிகள் கூடவும், குறையவும் செய்யும். இந்த வரையறை எல்லாம் முடித்த பின்னர்தான் அடுத்த நாடாளுமன்ற தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here