ஆசை ஆசையாக தனது சகோதரிக்கு பிளிப்கார்ட் வலைத்தளத்தில் டிஷ் வாஷர் ஆர்டர் செய்த விழுப்புரத்தை சேர்ந்த பொறியாளர் , தான் ஆர்டர் செய்த டிஷ் வாஷருக்கு பதிலாக டெலிவரி செய்யப்பட்ட வாஷிங் மெஷினை மாற்றி தரக்கோரி கடந்த ஒரு மாத காலமாக பிளிப்கார்ட் நிறுவனத்துடன் போராடி வருகிறார் . தொடர்ந்து அலைக்கழிக்கபட்டுவருவதால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்துள்ளார் .
விழுப்புரம் நகர பகுதியில் உள்ள கீழ்பெரும்பாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் ஓய்வுபெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் . இவருக்கு பா.ஆனந்த்ராஜ் வயது 33 , என்ற மகனும் . சுகுணா என்ற பெண்ணும் உள்ளனர் .
சுகுணா திருமணம் செய்து கொண்டு தனது கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார் . சுகுணா மற்றும் அவரது கணவர் இருவரும் வேளைக்கு சென்று வருவதால் , குழந்தைகளை வைத்துக்கொண்டு வீட்டு வேலைகள் புரிய சுகுணா மிகவும் கஷ்டப்படுவந்துள்ளார் .
தனது சகோதரியின் சிரமத்தை பற்றி அறிந்த அவரது தம்பி ஆனந்த்ராஜ் தனது சகோதரிக்கு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பாஷ்கம்பெனியின் சுமார் 42000 , மதிப்பிலான டிஷ் வாஷர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார் .
அவரது சகோதரியின் சென்னை முகவரியை பதிவு செய்து இருந்த்தால் அவர்களுக்கு டெலிவரி அடுத்தநாளே செய்துள்ளார் பிலிப்கார்ட் நிறுவனத்தினர் .
ஆனால் டெலிவரி செய்யப்பட்ட பேக்கிங்கை திறந்தபோது தான் ஆனந்த்ராஜின் சகோதரி சுகுணாவுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது , அவர் ஆர்டர் செய்த டிஷ் வாஷருக்கு பதிலாக அவருக்கு வாஷிங் மெஷின் டெலிவரி செய்யப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 3 ஆம் தேதிமுதல் பிலிப்கார்ட் வாடிக்கையாளர் சேவைமயத்தை பல முறை தொடர்பு கொண்ட ஆனந்த்ராஜ் தொடர்ந்து சேவைமைய அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு வந்துள்ளார் . இந்நிலையில் தான் அவரது பிரச்னை தீர்க்கப்படாமலே , அவரது புகார் முறையே சரி செய்யப்பட்டுவிட்டதாக பிலிப் கார்ட் நிறுவனத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது .
இதனால் மிகவும் விரக்தியடைந்த ஆனந்த்ராஜ் தொடர்ந்து பிலிப் கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது சேவை மைய அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர் . இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ள வாடிக்கையாளர் ஆனந்த்ராஜ் நுகர்வோர் நீதிமன்றத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்துள்ளார் .
மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள மனஉளைச்சலுக்கும் பிலிப் கார்ட் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார் .
முன்னாள் காவல்துறை அதிகாரியின் குடும்பத்தை சார்ந்தவர்களே தவறுதலாக டெலிவரி செய்யப்பட்ட வீட்டு உபயோக உபகரணத்தை மாற்றமுடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வரும் சம்பவம் , சாமானிய மக்களிடையே பிளிப்கார்ட் போன்ற வலைத்தளங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது .