பாராளுமன்றம் 7-வது நாளாக முடக்கம்., ’இந்தியா’ கூட்டணி கடும் அமளி.!

0
128
அமளியில் பாராளுமன்றம்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின.
பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு மேல்சபை எதிர்க்கட்சி தலைவரான அவரது அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.


மேலும் மணிப்பூருக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் செல்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்றும் அமளி நிலவியது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அதில் இருந்து நேற்று வரை 6 தினங்களாக பாராளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன. பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டு உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

இந்த அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை 12 மணி வரை ஒத்தி வைத்தார். மேல் சபையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மேல்சபை தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

டெரிக் ஓ பிரையன் எம்.பி.யின் நடத்தைக்கு அவை தலைவர் ஜெகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்தார். மேஜையை குத்தி பேசி நாடக மேடை போல் நடந்து கொள்வதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
தினசரி தொடரும் இத்தகைய நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். அதன்பின்னர் அமளி காரணமாக நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவையை அவை தலைவர் ஜெகதீப் தன்கர் நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.

வழக்கமாக 12 மணி அல்லது 2 மணி வரை ஒத்தி வைக்கப்படும். எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் இன்று 7வது நாளாக முடங்கியது. திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here