அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர வேண்டும். அப்போதுதான் திட்டங்கள் வெற்றி பெறும். மாணவர்கள் நலத் திட்டங்கள் குறித்து தாங்களும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்து சொல்ல வேண்டும். தகுதி வாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் திட்டங்களின் பலன்கள் சென்று சேர வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டார்.
இந்திய அரசின் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் கடலூர் டவுன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு நாட்கள் டிஜிட்டல் புகைப்பட கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய போது ஆட்சியர் அருண் தம்புராஜ் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்கள் நொறுக்குத் தீனிகள் உண்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறைகள் எனத் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். சிறுதானியங்களை பயன்படுத்துமாறு பெற்றோர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாணவர்கள் எந்தக் காரணம் கொண்டும் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சிக்கு பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை தலைமை உரையாற்றினார். விடாமுயற்சி இருந்தால் மாணவர்கள் தங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பாடப் புத்தகங்கள் மட்டும் போதாது. இலக்கியம், சமூகவியல் சார்ந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும். உயர்நிலைக்கு வந்துள்ளவர்களில் பலரும் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். வாழ்வில் வெற்றி பெற உழைப்புதான் அடிப்படை என்று திரு அண்ணாதுரை மேலும் தனது உரையில் தெரிவித்தார்.
கடலூர் மாநகராட்சி மேயர் ஆர்.சுந்தரி வாழ்த்துரை வழங்கினார். துணை மேயர் பா.தாமரைச்செல்வன், வேளாண் இணை இயக்குநர் பொ.ஜெயக்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழநி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் முனைவர் த.பழநி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசையும் சான்றிதழ்களையும் ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார். ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கும் பரிசுகளையும் ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் இல்லாத கடலூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் முனைவர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவி அலுவலர் எஸ்.வீரமணி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் அஞ்சல்துறை சார்பில் ஆதார் திருத்த முகாம் நடத்தப்படுகின்றது. மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வேளாண் துறை ஆகியவற்றின் சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
துவக்க நிகழ்ச்சியை அடுத்து ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி வளாக இயக்குநர் டாக்டர் நந்தகுமார புஜம் புதிய கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
இக்கண்காட்சி இன்று முதல் 21 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் டவுன் ஹாலில் நடைபெறுகின்றது. பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம்.