கிருஷ்ணகிரி வெடி விபத்தில் பலியானோர் பிரதமர் மோடி இரங்கல்

0
84
பிரதமர் மோடி

கிருஷ்ணகிரி பழைய பேட்டை அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகர் கோவில் செல்லும் வழியில் பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 11க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு, காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். வெடி விபத்து நடந்த இடத்தை எம்எல்ஏக்கள் மதியழகன், அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முறையான பாதுகாப்பு இன்றி பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரியில் 9 பேர் பலியாகக் காரணமான பட்டாசு குடோன் விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு குடோன் அருகில் செயல்பட்ட ஹோட்டலில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டல் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த பட்டாசு குடோனில் தீப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ரித்திஷ் ஆகியோர் உயிரிழந்தனர். பட்டாசு குடோன் அருகில் இருந்த ஹோட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி, இப்ராஹிம், இம்ரான் உள்பட 9 பேர் பலியாகினர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இப்ராஹிம், இம்ரான் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஆவர். ஹோட்டலில் வெடித்துச் சிதறிய சிலிண்டர், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதும் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்ட சோகமான விபத்து குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உதவித் தொகையாக இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் மோடி ஆணையிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here