என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று கடலூரில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். தையடுத்து தொண்டர்கள் சிலர் போலீஸ் வாகனத்தின் அடியில் தலைவைத்து முதல்வன் பட பாணியில் அன்புமணி ராமதாஸை அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அதாவது என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவியில் இன்னும் 2 மாதத்தில் அறுவடைக்கு தயாரான விளைநிலங்களில் ஜேசிபி,பொக்லைன் இயந்திரங்கள் இறங்கி நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கின.
இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடந்து வந்தது. இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து என்எல்சி வெளியேற வேண்டும் என அவர் ஆக்ரோஷமாக பேசினார். மேலும் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இந்த வேளையில் போலீசார் மற்றும் பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. இரும்பு தடுப்பு வேலிகள் தள்ளப்பட்டன. போலீஸ் வாகனம் மீது கல்வீசப்பட்டது. அதோடு போலீஸ் அதிகாரியின் மண்டை உடைந்ததோடு, 10 பேர் வரை காயமடைந்தனர்.
மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தடியடி நடத்தினர். வஜ்ரா வாகனத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. அதோடு அன்புமணி ராமதாஸை அதிரடியாக கைது செய்த போலீசார் வேனில் ஏற்றினர். இதனால் ஆக்ரோஷமடைந்த கட்சியினர் போலீஸ் வேனை சூழ்ந்து கொண்டனர். மேலும் அன்புமணி ராமதாஸை அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் அவர்கள் தடுத்தனர்.
இந்த வேளையில் சிலர் முதல்வன் பட பாணியில் போலீஸ் வேனின் முன்புறம் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் வேன் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து போலீஸ் வேன் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
போலீஸ் வேனின் முன்பும், பின்னும் பாமக கட்சியை சேர்ந்தவர்கள் அன்புமணி ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி செல்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.