2022 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருது” ஆணை வெளியீடு!

0
85
கலைஞர் எழுதுகோல் விருது

தமிழகத்தின் முன்னாள் முதலைமச்சரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி  அவர்களின் பிறந்த தினமான ஜுன் 3ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கௌரவிக்க ஆணை வெளியிடப்பட்டு, 2022 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்க நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக இவ்வாண்டு மட்டும் ஒரு பெண் இதழியலாளருக்கு கூடுதலாக ஒரு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கௌரவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அவ்வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக ஒரு பெண் இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கலைஞர் எழுதுகோல் விருது 2022 ஆம் ஆண்டிற்கான ஏற்கனவே பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களுடன், கூடுதல் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.

கலைஞர் எழுதுகோல் விருதானது, ரூபாய் ஐந்து இலட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.

விருதிற்கான தகுதிகளாக, விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்
விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

“கலைஞர் எழுதுகோல் விருது 2022” மற்றும் பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக கூடுதலாக ஒரு பெண் இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ஆகியவற்றிற்கான தகுதியான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு 31.7.2023 க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here