தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில மோதல் இருந்து வருகிறது. காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போது கார்நாடக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை வாரியம் கூடியது. அப்போது கர்நாடக அரசு வினாடிக்கு 5000 கனஅடி நீர் வீதம், 15 நாளைக்கு திறந்து விட வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது. இதற்கு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டனையாக இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளார். விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர். மெழுகுவர்த்தி ஏந்தி வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை தொடர்ந்து, காவிரி நீர் தொடர்பாக ஆலோசனை நடத்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.
இதற்கிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், அணைகளின் நீர் இருப்புகள் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். நேற்று காவிரில் நீர் வரத்து அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 4200 கனஅடியாக இருந்து நீர்வரத்து 6300 அடியாக அதிகரித்திருந்தது.