- அ சண்முக சுந்தரம்
தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பின்னர் இரு நாட்களாக மக்களவைக்கு வந்த ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தில் பேசிய அவர் பாரதத் தாய் மணிப்பூரில் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும், இந்த அரசின் அகங்காரத்தால் மணிப்பூர், ஹரியானா பற்றி எரிவதாகவும் கூறினார்.
ராகுல் காந்தியின் பேச்சின் இடையே பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இருப்பினும் ராகுல் காந்தி தொடர்ந்து பேசினார். இது ஒருபுறமிருக்க ராகுல் காந்தி மீது பாஜக பெண் அமைச்சர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். மக்களவையில் உறுப்பினர்களைப் பார்த்து அவர் ‘பிளையிங் கிஸ்’ கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
![](https://www.thenewscollect.com/wp-content/uploads/2023/09/rahul-gandhi-lok-sabha-102569994-1.webp)
ராகுல் காந்தி தனது பேச்சில், “இதற்கு முன் நான் பேசிய கருத்து பாஜகவினருக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இப்போது மோடி – அதானி உறவு குறித்துப் பேசப்போவதில்லை.
அதனால் பாஜகவினர் பயப்பட வேண்டாம். மணிப்பூர் பற்றி தான் பேசப்போகிறேன். இதயத்தில் இருந்து பேசும் பேச்சு இதயங்களை சென்றடையும் என்பதால் இதயத்தில் இருந்து பேசப் போகிறேன். 130 நாட்கள் நாட்டின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு மக்களுடன் இணைந்து நடை பயணம் மேற்கொண்டேன்.
![](https://www.thenewscollect.com/wp-content/uploads/2023/09/thenewscollect-Raghul-gandhi-flying-kiss-1.jpeg)
இன்னும் எனது நடை பயணம் முடிவடையவில்லை. பாரத ஒற்றுமை யாத்திரையின் போதும் அதன் பின்னரும் பலர் என்னிடம் ஏன் இந்த நடை பயணம் என்று கேட்டார்கள் கன்னியாகுமரியிலிருந்து நான் எனது பயணத்தை தொடங்கியது நாட்டைப் புரிந்துகொள்வதற்காகத் தான் “வெறுப்பு பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி” என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.
அந்த நடை பயணத்தின் போது நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன். அந்த சமயத்தில் விவசாயி ஒருவரிடம் பேசிய போது அவரது இதயத்தில் இருந்த வலி எனது இதயத்துக்கு இடம் மாறியது. நாட்டு மக்களின் குரலைக் கேட்கும் போது மனதில் உள்ள அகங்காரங்கள், ஆசைகள் எல்லாம் விலகிச் செல்லும். மனதில் அகங்காரம் இருக்கும் வரை நாட்டு மக்களின் குரல் நமக்கு கேட்காது. மணிப்பூருக்கு இதுநாள் வரை பிரதமர் செல்லவில்லை. ஆனால் நான் சென்றிருந்தேன். பிரதமர் மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாக கருதாததால் தான் அங்கு செல்லவில்லை. மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் இருக்கும் பெண்களிடம் பேசினேன்.
![](https://www.thenewscollect.com/wp-content/uploads/2023/09/thenewscollect-raghul-gandhi-flying-kiss-parliment-1.jpeg)
தன் கண் முன்னே தன் ஒரே மகன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது என்று ஒரு பெண் சொன்னார். நினைத்துப் பார்க்கவே முடியாத பயங்கரமான சம்பவன்கள் நடந்துள்ளதாக அப்பெண்கள் தெரிவித்தனர். இந்தியா என்ற சித்தாந்தத்தையே அரசு கொன்றிருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணமாகி உள்ளது. நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள். பாரதத் தாய் மணிப்பூரில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்தது. அரசின் அகங்காரத்தால் மணிப்பூர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன” என்று பேசினார்.