நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவ்வுத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி இன்று முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு செல்ல உள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ராகுல்காந்தி வருகை தந்தார்.
அப்போது கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் சாலை மர்க்கமாக நீலகிரிக்கு ராகுல் காந்தி வருகை தந்தார். இதனிடையே கோத்தகிரி வழியாக வந்த ராகுல் காந்தி அரவேனு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ‘வருங்கால பிரதமர் ராகுல்காந்தி’ என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். மேலும் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
எல்லநள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா உடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். பின்னர் அதேபகுதியில் சாக்லேட்கள் தயாரிக்கப்படும் முறையினை ராகுல் காந்தி பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து முத்துநாடுமந்து என்ற தோடர் பழங்குடியின கிராமத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவருக்கு தோடர் பழங்குடிகள் தங்களது பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். அப்போது பழங்குடியின மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். பின்னர் தேக்சீ அம்மன் முன்போ கோவிலை ராகுல் காந்தி பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அக்கோவிலைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்தனர்.
பின்னர் இளைஞர்கள் தங்களது பலத்தை காட்டும் வகையில் இளவட்டக்கல் தூக்குவதையும், பழங்கால முறைப்படி நெருப்பு மூட்டும் முறையையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். தோடர்களின் பாரம்பரிய உடையணிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் உடன் இணைந்து ராகுல் காந்தி நடனமாடினார். அப்போது ஒரு பெண் குழந்தையை ராகுல்காந்தி தூக்கி கொஞ்சியபடி முத்தமிட்டார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “ஐ லவ் டிரைபல்ஸ்” என்றார். இதையடுத்து கூடலூர் வழியாக கேரள மாநிலத்திற்குள் உள்ள வயநாடுவிற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதையொட்டி கோவை மற்றும் நீலகிரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.