டெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இன்று ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் அதானி பற்றி பேசி தனது உரையை தொடங்கியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று 2வது நாளாக விவாதம் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே அதானி பெயரை உச்சரித்து அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:
சபாநாயகர் அவர்களே, எனது தகுதி நீக்கத்தை திரும்ப பெற்று லோக்சபா எம்பியாக்கியதற்கு முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடைசியாக நான் அதானி மீது கவனம் செய்து பேசியது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கலாம்.அதோடு உங்களின் மூத்த தலைவர் (மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடி) கோபத்தோடு, வேதனை அடைந்து இருக்கலாம். அந்த வலி உங்களுக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை அறிகிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஆனால், நான் உண்மையைப் பேசினேன். இன்று எனது பேச்சு அதானியைப் பற்றி இருக்காது என்பதால் பாஜகவில் உள்ள எனது நண்பர்கள் பயப்படத் தேவையில்லை” என்றார்.
முன்னதாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறேன், பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் பதிலளிக்கவில்லை. இதனால் பாஜகவினர் என்மீது கோபமடைந்து என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.