அமைச்சர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்த நிலையில் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கோவை மற்றும் மாவட்டத்தின் பலபகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டது.

அதனை அப்புறப்படுத்தும் பணிகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டனர் . மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அறிவிப்பு வெளியிட்ட பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாமியாரின் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமியார் மீது போலீஸ்நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சியில் சாமியாரின் உருவப்பொம்மையை நள்ளிரவில் யாரோ தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் உள்ள மேம்பாலம் ஒன்றில் நேற்று நள்ளிரவு சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ பொம்மையை சிலர் தூக்கில் தொங்க விட்டு சென்றனர். இரவு நேரம் என்பதால் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவது போல அந்த பொம்மை காணப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சாமியாரின் படம் ஒட்டப்பட்டு உருவப்பொம்மை தொங்கவிடப்பட்டு இருந்தது.
உடனடியாக அந்த உருவப்பொம்மையை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சனாதனம் பிரச்சினை தொடர்பாக கோவையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க .வினர் மாறி, மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .