சென்னை: ஜனாதிபதி திரெளபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். ‛ஆஸ்கர்’ வென்ற ஆவணப்படத்தின் தம்பதி பொம்மன்-பெள்ளியை நேற்று சந்தித்து அவர் பாராட்டிய பிறகு சென்னை வந்தார். இந்நிலையில் இன்று அவர் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இந்த வேளையில் ஆளுநர் ஆர்என் ரவியும், முதல்வர் ஸ்டாலினும் அருகருகே நின்றது கவனத்தை ஈர்த்தது.
ஜனாதிபதி திரெளபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அதாவது டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் அவர் கர்நாடகா மாநிலம் மைசூர் வந்திருறங்கினார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு வந்தார். அங்கு அவர் யானைகளை பார்வையிட்டு கரும்புகள் வழங்கினார். அதன்பிறகு ‛ஆஸ்கர்’ வென்ற ‛எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளியை அவர் சந்தித்து பாராட்டினார். அதன்பிறகு மைசூரு சென்ற அவர் விமானத்தில் சென்னை வந்தார். சென்னை வந்த திரெளபதி முர்முவை ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நேரில் வரவேற்றனர்.
அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் திரெளபதி முர்மு ஓய்வெடுத்தார். இதையடுத்து இன்று காலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் திரெளபதி முர்மு பங்கேற்று 762 பேருக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கினார். கவுரவ டாக்டர், முனைவர் பட்டங்களை பெறுவோர் மற்றும் படிப்பில் பதக்கங்களை பெற்றோருக்கு திரெளபதி முர்மு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அருகருகே நின்றனர். இந்த விழாவின் முடிவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
அதன்பிறகு விழாவை முடித்து பிறகு ஆளுநர் மாளிகை செல்லும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்குமு் பாரதியார் படத்திறப்பு விழாவில் பங்கேற்று தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயரை சூட்ட உள்ளார். பிறகு இரவு 8 மணிக்கு ஆளுநர் ஆர்என் ரவி விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பிறகு இரவில் ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு நாளை காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் அவர் ஹெலிகாப்டரில் புதுச்சேரி புறப்படுகிறார். இதன்மூலம் தமிழ்நாட்டின் 3 நாள் சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகிறது. நாளை புதுச்சேரி செல்லும் திரெளபதி முர்மு புதுச்சேரி ஜவஹர்லால் முதுகலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் லீனியர் ஆக்சிலரேட்டர் உபகரணத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இரவில் அங்கு தங்கும் ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை மறுநாள் ஆரோவில்லில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டு அங்கு நடைபெற இருக்கும் மாநாட்டையும் தொடங்கி வைத்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். இந்நிலையில் திரெளபதி முர்முவின் வருகையொட்டி தமிழ்நாட்டில் பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.