மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போல உள்ளதாகவும், எனவே மத்திய பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்காக அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு இருந்து ஊர்வலமாக நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு புறப்பட்டு சென்றனர் , இந்தியன் வங்கி முன்பு அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய படி அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார். இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு (விடுதலை) கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.மாநில சி ஐ டி யு தலைவர் சௌந்தர்ராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
சி ஐ டி யு மாநில தலைவர் சௌந்தர்ராஜன் பேசும் போது “மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது. ஏழை எளிய மக்கள் மீது கொடூரமான புதிய வரிகளை விதித்துள்ளது. பெரு முதலாளிகளுக்கு சலுகைகளை அளிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. தனது கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன”இது ஒரு மக்கள் விரோத பட்ஜெட் எனவே இந்த பட்ஜெட்டை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார் .

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் வடிவீஸ்வரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மறியல் போராட்டத்திற்கு முன்னதாக அனைவரும் வேப்பமூடு பூங்கா முன் இருந்து இந்தியன் வங்கி நோக்கி பேரணியாக நடந்து வந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே சாலை ஓரமாக வரும்படி போலீசார் கூறினார்.
இதனால் போலீசாருக்கும், கட்சிக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது , எனினும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை .