மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்த நான்கு பேரை ரயில்வே பாதுகாப்புப் படையை சேர்ந்த (ஆர்பிஎஃப்) கான்ஸ்டபிள் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கான்ஸ்டபிள் சேத்தன் குமார் சவுத்ரி தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில், ஜெய்ப்பூர்-மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸில் பயணித்து கொண்டிருந்த RPF உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ASI) மற்றும் மூன்று பயணிகளும் திங்கள்கிழமை காலை 5 மணி அளவில் துடிதுடிக்க இறந்துள்ளனர் .
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட RPF கான்ஸ்டபிள் சேத்தன் குமார் சவுத்ரி மனநிலை சரியில்லாதவர் என்பது தெரிய வந்துள்ளது .
ரயில் பாலகர் அருகே சென்று கொண்டிருந்த போது தனது எஸ்கார்ட் டியூட்டி இன்சார்ஜ் ஆன ஏஎஸ்ஐ டிகா ராம் மீனா மீது கான்ஸ்டபிள் சேத்தன் துப்பாக்கிச் சூடு நடத்தினார் .அவருடைய மூத்த அதிகாரியை சுட்டு கொன்ற பிறகு , கான்ஸ்டபிள் சேத்தன் ரயிலில் பயணம் செய்த மூன்று பயணிகளை சுட்டுக் கொன்றுள்ளார் .
சேத்தன் துப்பாக்கி சூட்டை நடத்திய பின்னர் மீரா ரோடு மற்றும் தஹிசார் இடையே ரயிலில் இருந்து தப்பிக்க முயன்றார், ஆனால் பின்னர் ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் மற்றும் அவரது ஆயுதமும் கைப்பற்றப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த குற்றவாளி சேத்தன் தற்போது மீரா ரோடு ரயில்வே போலீசாரின் காவலில் உள்ளார்.
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, கான்ஸ்டபிள் சவுத்ரி உட்பட நான்கு ஆர்பிஎஃப் வீரர்கள் திங்கள்கிழமை குஜராத்தின் சூரத் நிலையத்திலிருந்து ஜெய்ப்பூர்-மும்பை சென்ட்ரல் விரைவு வண்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .
மேற்கு ரயில்வேயின் (WR) தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் PTI இடம் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் இங்குள்ள லோயர் பரேல் RPF பிரிவை சேர்ந்தவர் , அதே நேரத்தில் ASI டிகா ராம் மீனா தாதர் RPF பிரிவை சேர்ந்தவர் .
உயிரிழந்த ஏஎஸ்ஐ மீனாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மேற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த மற்ற 3 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கேட்டதற்கு, “இழப்பு தொகை வழங்கப்படும்” என்று தாக்கூர் கூறினார்.