மேல்பாதி 15 நாட்களுக்குள் பட்டியல் இன மக்களை அழைத்து சென்று சாமி தரிசனம் -கோட்டாட்சியர்

0
126
பேச்சுவார்த்தையில் கோட்டாட்சியர்

நீண்ட நாட்களாக விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில், வழிபாடு நடத்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து, அந்தக் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன், கோயில் மற்றும் கோயில் வளாகத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்று 145 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

கோயில் பூட்டி சீல் வைப்பதற்கு முன்பாக, இரு பிரிவினரிடையே அதிகாரிகள் நடத்திய 9 கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், 145 தடை உத்தரவை விலக்கி, சுமூகத் தீர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின தரப்பைச் சேர்ந்த 10 பேருக்கு, விசாரணைக்காக ஆஜராகும்படி அழைப்பானை விடுக்கப்பட்டது.

கோட்டாட்சியர்

இந்த அழைப்பாணையை ஏற்று, விசாரணைக்காக இன்று 8 பேர் மட்டும் நேரில் ஆஜராகினர். வருவாய் கோட்டாட்சியர் பிரவினாகுமாரி தலைமையில் சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணைக்கு பின், விசாரணையில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள் தமிழ்மாறன் மற்றும் பூவைஆறு ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கூறுகையில், வருவாய் கோட்டாட்சியர் மேற்கொண்ட விசாரணையின் முடிவில், 2 நாட்களுக்குள் பட்டியலின மக்கள் தரப்பில் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு சார்பில் வழங்கப்படும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு வார காலத்திற்குள் பட்டியலின மக்களை தாக்கிய நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்ததாகக் கூறினர்.
மேலும், வரும் 15 நாட்களுக்குள் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று, சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி உறுதி அளித்ததாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here