கர்நாடக அரசின் துணை முதல்வர் மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று கூறுவதற்கு சசிகலா கண்டனம்!

0
89
சசிகலா

காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் துணை முதல்வர் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று, தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது கண்டனத்திற்குரியது. திமுகவினர் கர்நாடக காங்கிரஸ் கட்சியினரோடு எந்தவித சமரசத்திற்கும் ஆட்படாமல் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாத்திட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் துணை முதல்வர் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று தொடர்ந்து பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழக விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமானது. இரு மாநிலத்தில் உள்ள மக்களின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் செயல். திமுக தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

பூகோள ரீதியாக தமிழகம் வடிநிலப்பகுதியாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக ஆறுகளில் வரும் நீரை அணைகள் கட்டி தேக்க முடிவதில்லை. இந்த நிலையில் கர்நாடகா, கேரளா போன்ற மேல் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்கள் புதிய அணைகளைக் கட்டுவதன் மூலம், தமிழகத்திற்கு வடிகின்ற நீரை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு வடிகின்ற நீரை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. இது போன்ற நடவடிக்கைகள் இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொடர் முயற்சியால், தமிழகத்துக்கு ஆண்டுக்கு. 205 டி.எம்.சி நீரைக் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி தமிழகத்திற்கு நீரை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் ஒன்பதாவது அட்டவணையில் வெளியிட செய்தார். மேலும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி நீரை பெறுவதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறு சட்ட போராட்டங்களை முன்னெடுத்து காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும் என தனது இறுதிமூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடினார். கடந்த 2016ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் கூட தமிழக அரசு அதிகாரிகளை மருத்துவமனைக்கே நேரில் வரவழைத்து காவிரி நதி நீரை பெறுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட நீண்ட கால சட்ட போராட்டத்தின் பயனாக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இத்தகைய சூழலில் கர்நாடக அரசு எந்தவித கட்டுப்பாடுமின்றி தன்னிச்சையாக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசு தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட இயலாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து இருக்கும் திமுகவினர் கர்நாடகா காங்கிரஸ் அரசின் எந்தவித சமரசத்திற்கும் உடன்படாமல், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட துடிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் எண்ணத்தை முறியடிக்கவேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் எடுத்த உறுதியான நடவடிக்கைகளைப்போன்று இன்றைய திமுக தலைமையிலான அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரியின் குறுக்கே அணைகட்ட மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, திமுக தலைமையிலான அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும், தமிழக விவசாயிகளுக்கு பாதகத்தை விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு மேற்கொள்ளும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும். மேலும் திமுகவினர் சுயநலத்தை கைவிட்டு தமிழர்கள் நலனைக்கருத்தில் கொண்டு செயல்படும்போதுதான், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முடியும். தமிழக விவசாயத்திற்கு இன்றியமையாததாக விளங்கும் காவிரி நீரை பெறுவதிலும் உறுதியோடு இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையான காவிரி நதி நீரானாது தமிழகத்திற்கு கிடைத்துவிட கூடாது என்று சுயநலத்தோடு தொடர்ந்து செயல்படும் காங்கிரஸ் தமைமையிலான கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட எந்தவித அனுமதியையும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here