பண்ருட்டி துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சத்துணவு ஊழியருக்கு காயம் ஏற்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சிதிலமடைந்து இருக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப் போவதாக அறிவித்த திமுக, அதன் பிறகு அது குறித்துப் பேசுவதே இல்லை. பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசுக்கு முழிப்பு வருமா?
தேவையில்லாத விளம்பரச் செலவினங்களை விடுத்து, மாணவர்களுக்குப் பயன்படும் பள்ளிக் கட்டிடங்களை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் என்று, தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.