காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக காங்கிரஸ் அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் – அண்ணாமலை

0
104

காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை இன்றி வந்து கொண்டிருந்த காவிரி நீரைத் திறந்து விடாமல் நிறுத்தியிருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துப் போராடிய விவசாயிகள் சங்கத்தினரையும், தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக, தமிழக மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா அல்லது கூட்டணிக் கட்சிகள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

திமுகவின் கூட்டணிக் கட்சி என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவால் உருவாக்கப்பட்டு, நெடுங்காலமாக இருந்து வந்த காவிரிப் பிரச்சினைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால்தான் தீர்வு கிடைத்தது. தற்போதும், தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

காவிரி நீர்

திமுக, தங்கள் தனிப்பட்ட பலன்களுக்காக, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்களைப் பலிகொடுப்பதை எப்போது நிறுத்தும்? உடனடியாக, தமிழகத்துக்குச் சேர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here