கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆதி திராவிட துணை திட்ட நிதி பயன்படுத்துகிறதா? தமிழக அரசு விளக்கம்

0
97
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி எடுக்கப்படுகிறதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவலை தமிழக அரசு முற்றிலும் மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களின் நிதியை பயன்படுத்தியுள்ளதாக தேசிய பட்டியல் இனத்தினருக்கான ஆணையத்தில் ஒரு தனிநபர் புகார் அளித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் சில செய்திகள் வெளிவந்துள்ளன. ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு முறையைப் பற்றிய தவறான புரிதலின் காரணமாக தான் இந்த புகாரும், அதனை பற்றிய செய்திகளும் எழுந்துள்ளன.

பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும். இந்தத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் மட்டுமே பயன்பெறத்தக்க திட்டங்களும், பொதுத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் பயன்பெறும் திட்டங்களும் உள்ளன.

இந்த முறையின்படி, பொதுத் திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயன்களுக்கு நிதி தனியாக ஒரு தலைப்பின் கீழ் ஒதுக்கப்படுகிறது. இத்தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை அப்பிரிவு மக்களக்கு மட்டுமே செலவிட இயலும், இந்தத் தனி ஒதுக்கீடு முறையை தான் ஒன்றிய அரசும், பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன.

ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புறம்) அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) போன்ற முக்கிய திட்டங்களுக்கு இந்த முறையில் தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் இலவச சீருடை போன்ற மாநில அரசின் திட்டங்களுக்கும். இதே முறையில் தான் பட்டியலினத்தவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதே போல் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவர்க்கென 1,540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் இந்த மகத்தான புதிய திட்டத்தில் பட்டியலினத்தவர் விடுபடாமல் திட்டத்தின் பயன்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவருக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒதுக்கப்பட்ட 1,540 கோடி ரூபாயை பட்டியலினத்தவருக்கு மட்டும் தான் செலவிட இயலும். இது மட்டுமன்றி, கடந்த 2020-21 ஆம் ஆண்டு 13,680 கோடி ரூபாயாக இருந்த பட்டியலின மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஆதி திராவிடர் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு. 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. 17.076 கோடி ரூபாயாக சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடித்தளமாக கொண்டுள்ள இந்த அரசு, பட்டியலினத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக. பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது. பட்டியலினத்தவர் / பழங்குடியின தொழில் முனைவோர்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்க ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம்’ 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here