டெல்லி: மணிப்பூரில் மைத்தேயி இன கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட
2 பெண்களிடம் சிபிஐ வாக்குமூலம் பெற உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மணிப்பூரில் குக்கி இன பெண்கள்
பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் மெய்டீ சமூகத்தின் தங்களை பழங்குடி இனத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 3-ம் தேதி மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் மணிப்பூரில் 10 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியில் திடீரென மோதல் வெடித்ததால் அது கலவரமாக மாறியது. இதில் பல்வேறு வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அம்மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்த கலவரத்தால் இதுவரை மெய்டீ இனத்தை சேர்ந்த 9,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மணிப்பூரில் கலவரம் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் நேற்று சரமாரியான கேள்விகளை முன்வைத்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் நேற்றைய விசாரணையின் போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படியே பலாத்கார சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதாகவே தெரிகிறது? சம்பவம் நடந்து 14 நாட்கள் கழித்து ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது? மணிப்பூரில் நடந்தது ஒரு சம்பவம் மட்டும்தானா? என கேள்விகளை எழுப்பினார் தலைமை நீதிபதி சந்திரசூட்.
மேலும் மணிப்பூர் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது தொடர்பாக பெண் நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ வாக்குமூலம் பெறுவதை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணை வர உள்ளதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.