தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்திலிருந்து ”என் மண் என் மக்கள் யாத்திரை” என்ற நடைபயத்தை தொடங்கியுள்ளார். 164 நாட்கள் நடைபெறும் இந்த நடை பயணத்தில் 234 தொகுதிகளையும் சென்றடைகிறார் அண்ணாமலை. இந்த நிகழ்வை அமித்ஷா தொடங்கி வைத்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த யாத்திரை எதை நோக்கி என்பதில் அவருக்கே இன்னும் தெளிவு கிடைக்கவில்லை எனலாம். மக்களை சந்திக்க போகிறேன். எது தொடர்பாக மக்களை அவர் சந்திக்கப் போகிறார், தற்போது நிலவும் விலைவாசி உயர்வு பற்றி மக்களிடம் கேட்டறிய போகிறாரா, அல்லது பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பீட்டுக் கொள்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? என்று அறியப் போகிறாரா? எந்த துறைகளிலும் இதுவரை மத்திய அரசு மக்களை வேலைவாய்ப்புக்கு அழைக்கவில்லையே, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கப் போகிறாரா? என்பது அண்ணாமலைக்கே புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
மக்கள் மறதியில் இருப்பார்கள் அவர்களிடம் சென்று 2024 ஆட்சியில் பிஜேபி எதையெல்லாம் செய்யப்போகிறது என்று சொல்லப் போகிறாரா? அண்ணாமலை, தெரியவில்லை. தமிழகத்தில் பாஜகவை காலுன்ற செய்ய ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு இந்த மக்கள் யாத்திரையை தொடங்கி இருக்கிறார் அண்ணாமலை. அது பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் என்கிற எண்ணம் அவருக்கு. ஆனால் இதுதான் பாஜகவை மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டக்கூடிய நிகழ்வாக திகழப் போகிறது.
தமிழகத்தின் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டர் தொடங்கி துப்புரவு பணியாளர் வரை கண்ணுக்கெட்டிய தூரம் வரை தமிழர்களை பார்க்க முடியவில்லை. ரயில்வே துறை தான் அப்படி என்றால் தபால்துறை அதைவிட மோசமாக உள்ளது. இப்போது இருக்கிற பொருளாதார நெருக்கடியில் மக்கள் இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மறந்து போய் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் எப்போதும் மறதி நோயில் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று அண்ணாமலை நினைப்பது தவறு.
பாஜக ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக மக்கள் வாழ்க்கை பயணம் எதை நோக்கி செல்லுகிறது என்ற சந்தேகத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலையின் நடை பயணம் மக்களுக்கு விடியலை ஏற்படுத்தும் என்கிற அவருடைய நம்பிக்கை அவராலே அடித்து நொறுக்கப்பட போவது உண்மை என்பதை அண்ணாமலை இன்னமும் உணரவில்லை. ஆனால் மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த நடை பயணம் தான் பாஜகவின் ஆட்சியை மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப் போகிறது..
ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்