இராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் ஆடவர், ஹாக்கி அணியில் தமிழ்நாடு கர்நாடகா அணிகள் மோதியதில் 5-3 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. மகளிர் ஹாக்கி அணியில் கர்நாடகா தமிழ்நாடு மோதியதில் கர்நாடகா 3-1 என்ற கணக்கில் கர்நாடக வெற்றி பெற்றது.

தென் இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் ராமநாதபுரத்தில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த ஜூனியர் மகளிர், ஆடவர் அணிகள் கலந்து கொண்டன. மகளிர் பிரிவு ஆட்டத்தில் ஆந்திரப் பிரதேச அணி9:0 என்ற கோல் கணக்கில் கேரள அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. ஆந்திர வீராங்கனைபாப்ளி ஜான்ஸி ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆடவர் பிரிவு ஆட்டத்தில் கேரள அணி 4:3 என்ற கோல் கணக்கில் ஆந்திரப் பிரதேச அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. கேரள வீரர் சாய்ராம் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 3:1 என்ற கோல் கணக்கில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியை வீழ்த்தித் தங்கப்பதக்கம் வென்றது. ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணி 5:3 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியை வென்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ஹாக்கி யூனிட் ஆட் தமிழ்நாடு பொதுச்செயலர் செந்தில் ராஜ்குமார், பொருளாளர் ராஜராஜன், மாவட்ட ஹாக்கி சங்க சீனியர் துணைத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ராணி லட்சுமி குமரன் சேதுபதி, ஹாக்கி சங்க மாவட்ட துணைத் தலைவர் அரவிந்த் ராஜ், துணைத்தலைவர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா , முத்துராமலிங்கம் , நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.