இடபிரச்சனை, தேர்தல் முன்விரோதம் போன்ற காரணங்களால், அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் வெட்டி கொலை. கொலை தொடர்பாக தி.மு.க., கவுன்சிலர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், 5 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பழமார்நேரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (39). இவர் அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசாறை செயலாளராக இருந்து வருகிறார். மேலும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி 5வது வார்டு முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். பிளக்ஸ் வடிவமைப்பு கடை நடத்தி வரும் பிரபுக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது மைக்கேல்பட்டி பாம்பாளம்மன் கோவில் அருககே குடும்பத்துடன் வசித்து வரும் பிரபு நேற்றிரவு திருக்காட்டுப்பள்ளியில், உள்ள நண்பரின் கடை முன்பு அமர்ந்து நண்பர்களுடன் பிரபு பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, டூ வீலரில் வந்த சிலர் பிரபுவின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்திற்கு இடத்திற்கு எஸ்.பி., ஆஷிஷ்ராவத், திருவையாறு டி.எஸ்.பி., ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட
விசாரணையில், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் பிரபுவுக்கும் இடபிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதேபோல் நடந்து முடிந்து பேரூராட்சி தேர்தலில், திருக்காட்டுப்பள்ளி 5வது வார்டில், தி.மு.க.,சார்பில் போட்டியிட்ட பாஸ்கரனை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.
இதனால் பாஸ்கரனுக்கும் பிரபுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், பிரபுவை கொலை செய்ய பாரதிராஜா மற்றும் பாஸ்கரன் திட்டம் போட்டு பிரபுவை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக பாரதிராஜா (26), மணிகண்டன் (33), ரமேஷ் (42), நாகராஜ் (30), சின்னையன் (24), பாஸ்கரன் (49) ஆகிய ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், பாரதிராஜா, மணிகண்டன்,ரமேஷ், நாகராஜ், சின்னையன் ஆகிய ஐந்து பேரும் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தி.மு.க., கவுன்சிலரான பாஸ்கரன், 48, என்பவரிடம், திருக்காட்டுப்பள்ளி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கொலை சம்பவத்தால் திருக்காட்டுப்பள்ளியில் 100க்கும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.