- 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில்தான் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இன்று முதல் சட்டப்பேரவை கூட்டம் கூடப்பட்ட நிலையில், 370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரி தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், முதல் நாளே அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டிக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு, 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் தனியாகவும், லடாக் தனியாகவும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும் கூட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளுடன் சேர்ந்து பல ஜனநாயக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
இப்படி இருக்கையில்தான் சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன், காங்கிரஸ் கை கோர்த்து போட்டியிட்டது. பிடிபி கட்சி தனியாகவும், பாஜக தனியாகவும் களம் கண்டன. இதில் தேசிய மாநாட்டு கட்சி+காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தலின் பிரதான முழக்கமாக, ரத்து செய்யப்பட்ட 370 சட்டப்பிரிவை மீட்டுப்போம் என்று இந்த கூட்டணி வாக்குறுதியளித்திருந்தது.
இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீரின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று பிடிபி கட்சியின் எம்எல்ஏ, 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவது குறித்து தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். எனவே கூட்டத்தின் முதல் நாளே களேபரமாகியுள்ளது. தீர்மானத்தை பிடிபி எம்எல்ஏ வாபஸ் பெற வேண்டும் என்று பாஜகவின் முழக்கமிட்டனர்.
இதனையடுத்து சபாநயகர், தீர்மானத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று விளக்கமளித்தார். எனவே சலசலப்பு ஓய்ந்திருக்கிறது. 370 சட்டப்பிரிவை மீட்டெடுப்பது குறித்து பிடிபி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி இரண்டும் ஒரே நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. ஆனால், யார் இதில் முந்திக்கொள்வது என்பது இரு கட்சிகளிடையே மோதலாக மாறியிருக்கிறது. மறுபுறம் 370 மீண்டும் கொண்டு வரப்படாது என பாஜக தெளிவாக கூறி வருகிறது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/opposition-parties-insist-on-conducting-population-census-the-central-government-has-not-said-anything-about-it/
இது தவிர, ஜம்மு காஷ்மீரில் கையெறிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து விவாதம் மேலெழுந்தது. நேற்று, லால் சவுக் எனும் பகுதியில் வார சந்தை நடைபெற்று வந்திருக்கிறது. இந்த சந்தையில், பொதுமக்கள் கூடியிருக்கும் நேரம் பார்த்து கையெறிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் ராணுவம் தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் சிலர் சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர்.