செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை.!

0
165
செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார்

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியின் போது அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த மே மாதம் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு கூடிய திமுகவினர் வருமான வரித் துறை அதிகாரிகளை உள்ளே விடாமல் வாக்குவாதம் செய்தனர். மேலும் அதிகாரிகளிடம் இருந்த ஃபைல்களை பறித்து தூக்கி எறிந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதையடுத்து அவரை கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. அதன் பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக அமைச்சர் கூறியதை அடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது மனைவியின் ஆட்கொணர்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் 

இந்த நிலையில் அவரை அமலாக்கத் துறை விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் அவர் தற்போது அமலாக்கத் துறையின் கஸ்டடியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்த போது சென்னையில் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் அசோக்குமார் வெளிநாட்டில் இருப்பதாக தெரிகிறது. அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவரும் இதய பிரச்சினை இருப்பதாக கூறி சம்மன் சமர்ப்பித்து காலதாமதம் கோரி வந்தார். இந்த நிலையில் கரூரில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி உள்ளிட்டோரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ராம்நகர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில் பல கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார். இங்கு விலை உயர்ந்த கிரானைட் மார்பில் கற்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் கடந்த மே மாதம் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அப்போது பல ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் கரூரில் அசோக்குமாரின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது. புதிதாக கட்டி வரும் வீட்டில் அமலாக்கத்
துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு இருப்பதாகவும் விலை உயர்ந்த கட்டுமான பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது. அமலாக்கத் துறை கஸ்டடியில் இருக்கும் செந்தில் பாலாஜியிடம் புதிய வீடு உள்பட 60 சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here