பல்லடம் அருகே காதலனுடன் பேசிக்கொண்டிருந்த போது காதலனை தாக்கி விரட்டி விட்டு இளம்பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மூவர் கைது. மேலும் ஒருவனுக்கு பல்லடம் போலீசார் வலை. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொசவம்பாளையம் சாலையில் காதலனுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் குமார்(வயது 31), ஜான்சன் (26), ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த பார்த்தீபன் (25) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் 2 பேரிடமும் இங்கு தனியாக என்ன செய்து கொண்டிக்கிறீர்கள் என்று கேட்ட அவர்கள் சிறுமியின் காதலனை சரமாரி தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று காளிவேலம்பட்டி அருகே காட்டுப்பகுதி வழியாக செல்லும்போது திடீரென 3 பேரும் சிறுமியை அங்குள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியதுடன் பல்லடம்- கோவை சாலையில் உள்ள செட்டிப்பாளையத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் காளிவேலம்பட்டி, செட்டிப்பாளையம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போது அதில் ரமேஷ்குமார், ஜான்சன், பார்த்தீபன் ஆகியோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதைனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் திருப்பூர் சிறையில் அடைத்தனர்.மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவனை பல்லடம் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.