சாதியினால் பிளஸ் 2 மாணவனை வெட்டிய சம்பவம் – திருமாவளவன் கண்டனம்

0
144
திருமாவளவன்

சாதிவெறிபிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் நாங்குநேரி சம்பவத்திற்கு முதன்மை காரணமாகும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பதிவில்,”நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திராதேவி ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் சின்னதுரையுடன் படிக்கும் மாணவர்கள்தான் என்பது இளந்தலைமுறையினர் எவ்வாறு இங்கே வளர்க்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது. சாதிவெறிபிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் இதற்கு முதன்மை காரணமாகும்.

பாதிக்கப்பட்ட மாணவன்

சாதிப்பெருமை, மதப்பெருமை என்னும் பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியலே காரணம். சாதியவாதம், மதவாதம், இனவாதம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாயிருக்கும் சங்பரிவார்கள் இத்தகைய சமூக முரண்களைக் கூர்மைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் கைகளில் சாதி அடையாள கயிறுகளைக் கட்டுவது, சைக்கிள்கள்- இருசக்கர வண்டிகளில் சாதி அடையாள முத்திரைகளை வரைவது அல்லது ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளை சாதிய- மதவெறி அமைப்புபள் மாணவர்களிடையே திணிப்பதும் நடக்கிறது.

அரசு இவற்றையெல்லாம் கண்காணித்து மாணவச் சமூகத்தைப் பாதுகாத்திட வேண்டும். சின்னதுரை குடும்பத்திற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும். வேறு பள்ளியில் சின்னதுரை கல்வித் தொடர அரசு ஆவன செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளனரா
என ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அப்பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவித்து சட்டபூர்வமான பாதுகாப்பை அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here