மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவை, சுற்றுச்சூழல், பெருங்கடல் மற்றும் மீன்வளத்திற்கான ஐரோப்பிய ஆணையர் வெர்ஜினிஜஸ் சின்கேவிசியஸ் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று புதுதில்லியில் சந்தித்தனர். மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொடர்பான பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, துறைமுக நடவடிக்கை ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பில் மீன்வள மானியப் பிரச்சினைகள், இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையம் (ஐஓடிசி), ‘கடல் மற்றும் மீன்வளம், மீன்பிடித்தல் மற்றும் சந்தை அணுகல் தொடர்பான பிரச்சினைகள் போன்ற முக்கியமான விஷயங்களில் ஈடுபட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை ஆய்வு மையத்தில், இந்திய வளர்ப்பு இறால்களை பரிசோதிப்பதற்கான மாதிரி அதிர்வெண்ணை தற்போதைய 50% லிருந்து முந்தைய அளவான 10% ஆக குறைத்தல், பட்டியலிடப்படாத மீன் நிறுவனங்களை மீண்டும் பட்டியலிடுதல், இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீர்வாழ் உயிரின இறால்களை ஏற்றுமதி செய்ய புதிதாக பட்டியலிடப்பட்ட மீன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல் தொடர்பான விஷயங்களில் இந்திய தரப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்தை ஈர்த்தது.
மேலும், மே 2021 இல் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு விடுக்கப்பட்டஅழைப்பின் தொடர்ச்சியாக இந்தோ – பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியின் (ஐபிஓஐ) எந்தவொரு அமைப்பிலும் சேருமாறு ஐரோப்பிய ஒன்றியத் தரப்பு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், செயலாளர் அபிலக்ஷ் லிகி மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மூத்த அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய ஏற்றுமதி ஆய்வு கவுன்சில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.